திருச்சி: தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் ஒப்பந்தப்புள்ளி கோருவதில் மட்டும் ரூ.1,020 கோடி ஊழல் நடந்துள்ளதாக மத்திய அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யும்படி, தமிழக பொறுப்பு டிஜிபிக்கு இரண்டாம் முறையாக அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், தன் மீதான நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்றும் அமலாக்கத்துறைக்கும் பாஜகவிற்கும் திமுகவினர் அஞ்சமாட்டார்கள் என்றும் அமைச்சர் கேஎன் நேரு கூறியுள்ளார்.
பாஜக அரசின் ஏவல் துறையாக அமலாக்கத்துறை மாறிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அத்துறையினர் தம்மைப்பற்றி நாள்தோறும் புகார்களை எழுப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது துறையின் சாதனைகள் என்று குறிப்பிட்டு ஒரு பட்டியலையும் செய்தியாளரிடம் அளித்தார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளில் எனது துறையின் கீழ் 24,752 கிலோ மீட்டர் சாலைகள் போடப்பட்டுள்ளன.
கிராமப்புற மக்களின் குடிநீர் தேவையை தீர்க்கும் வகையில் 1.22 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் இதுவரை 1,762 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக புதிய அவதாரம் எடுத்துள்ள அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சிகளின் தூக்கத்தை திமுக அரசின் சாதனைகள் கலைத்துவிட்டன.
“அதனால்தான் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற முகவைகளை ஏவி விடுகிறார்கள். பாஜகவின் அரசியல் பிரசாரத்தை அமலாக்கத்துறையை வைத்தே செய்கிறார்கள்,” என்று திரு நேரு மேலும் கூறியுள்ளார்.
அதிமுக - பாஜக கூட்டணியினர் பொய்யையும் புரட்டையும் மட்டுமே மூலதனமாக வைத்து மேற்கொள்ளும் அவதூறு பிரசாரத்துக்கு திமுகவினர் அஞ்ச மாட்டார்கள் என நேரு மேலும் தெரிவித்தார்.

