சென்னை: தமிழ்நாடு அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.11.63 கோடியும் ரத்த மையத்தினை மேம்படுத்துவதற்கு ரூ.1.74 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை ராயபுரத்தில் 74 படுக்கைகளுடன் 1880ல் நிறுவப்பட்ட அரசு ராஜா சர் ராமசாமி முதலியார் (ஆர்எஸ்ஆர்எம்) மருத்துவமனை வறுமை நிலையிலுள்ள தாய்மார்களுக்கு சேவை செய்வதில் முதன்மையாக உள்ளது.
குடும்ப நல மருத்துவ சிகிச்சைகள், குடும்பக் கட்டுப்பாடு, மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் நடைமுறைகள் உள்ளிட்ட முழு அளவிலான சேவைகளை அந்த மருத்துவமனை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளில் குறைந்த மகப்பேறு இறப்பு விகிதம், குறைந்த பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் உள்ள முன்னணி மருத்துவமனையாக அந்த மருத்துவமனை உள்ளது. அங்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 12,000 மகப்பேறுகள் நடைபெறுகிறது.
அதன் செயல்திறனை அதிகரிப்பதற்காக, தமிழ்நாடு அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையின் கட்டடச் சீரமைப்பு, மின்சாரக் கருவிகள், மின்தூக்கிப் பணிகளுக்காக ரூ.11.63 கோடி நிதி ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த மருத்துவமனையின் தரம் மேம்படுகிறது.
மருத்துவமனையில் உள்ள ரத்த மையத்தை முழு அளவிலான ரத்தக் கூறுகள் பிரிப்பு பிரிவு மையமாக மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு ரூ.174,201,97 நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பிரசவ காலத்தில் தாய்மார்களுக்கு தேவைப்படும் ரத்த சேவை உடனுக்குடன் வழங்குவதற்கு பேருதவியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.