ரூ.135 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்: தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

ரூ.135 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல்: தவெக நிர்வாகி உட்பட 4 பேர் கைது

படம்: இந்து தமிழ் திசை

17 Oct 2026 - 5:25 pm

2 mins read

நாகப்பட்டினம்: இலங்கைக்குக் கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான ‘மெத்தம்பெட்டமைன்’ போதைப்பொருளைப் பதுக்கி வைத்திருந்த நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி உட்பட நான்கு பேரை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்தனர்.

நாகையில் இருந்து கடல் வழியாக இலங்கைக்குப் பேரளவில் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக திருச்சியில் உள்ள அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரம் பகுதியில் அதிகாரிகள் குழு அதிரடி சோதனை மேற்கொண்டது.

அங்கு பிடிபட்ட சுகன் (27) என்பவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், தவெக மாவட்ட செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன் (42) என்பவர் இந்த அனைத்துலகக் கடத்தல் வலையமைப்பின் பின்னணியாக செயல்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து, பூபாலன் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளைக் கைப்பற்றினர். இதன் அனைத்துலக கள்ளச்சந்தை மதிப்பு ரூ.100 கோடி முதல் ரூ.135 கோடி வரை இருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கடத்தலுக்கு உறுதுணையாக இருந்த பூபாலனின் சகோதரர் பார்த்திபன், சதீஷ் ஆகியோரையும் சேர்த்து மொத்தம் நான்கு பேரை அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில், கனடாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர் ஒருவர், இலங்கையைச் சேர்ந்த பூபாலனின் மனைவி ஆகியோர் மூலம் அனைத்துலக அளவில் தொடர்புகளை ஏற்படுத்தி இவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கட்சியின் கட்டுப்பாட்டையும் நற்பெயரையும் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி, பூபாலனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்குவதாக தவெக தலைமை அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
தவெகபோதைப்பொருள்சந்தைநிர்வாகிகைது