சென்னை: தமிழகத்தில் மின்மாற்றிகள் (டிரான்ஸ்ஃபோர்மர்) கொள்முதல் நடவடிக்கையில், ரூ.397 கோடி முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரின் பேரில், மின்வாரிய அதிகாரிகள் மூன்று பேர்மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் 45,000 மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில், பெருந்தொகை கையூட்டாகக் கைமாறியதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியது.
கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளிகளை அரசு கோரியபோது, பங்கேற்ற ஒப்பந்ததாரர்கள் அனைவருமே ஒரே விலை குறிப்பிட்டதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதுகுறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த இயக்கம் வலியுறுத்தியது.
இந்நிலையில், இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, அதிமுக வழக்கறிஞர் சார்பாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், மின்மாற்றிகள் கொள்முதல் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
மேலும், வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் தமிழக லஞ்ச ஒழிப்புக் காவல்துறையினர் இரண்டு வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
ஆனால், மின் பகிர்மானக் கழகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, மின்மாற்றிகள் கொள்முதல் விவகாரத்தில் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் மூன்று பேர்மீது சிபிஐ தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளது.

