ரூ.397 கோடி ஊழல்: தமிழ்நாடு மின் உற்பத்திக் கழகத்துக்கு எதிராக வழக்கு

1 mins read
fb944386-d02f-439d-856e-83af2f2e504b
டெல்லியைச் சேர்ந்த சிவராமன் என்பவர், தாக்கல் செய்த மனுவில், பெரும் ஊழல் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: தமிழகத்தில் மின்மாற்றிகள் (டிரான்ஸ்ஃபார்மர்) கொள்முதலில், பல கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி, விநியோகக் கழகத்திற்கு (டான்ஜெட்கோ) எதிராக, டெல்லியில் உள்ள இந்திய போட்டி ஆணையத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சிவராமன் என்பவர், இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், ரூ.397 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மின்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்தபோது, மாநிலம் முழுவதும் 45,800 மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டன என்றும் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1,182 கோடி என்றும் சிவராமன் தெரிவித்துள்ளார்.

இதற்காக பெறப்பட்ட ஏழு ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் 26,300 மின்மாற்றிகளைக் கொள்முதல் செய்ததில், மின்துறைக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு 800 மின்மாற்றிகளைக் கொள்முதல் செய்வதற்காக 26 ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டதாகவும் அவற்றை அளித்த ஒப்பந்ததாரர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக கொள்முதல் விலையை நிர்ணயம் செய்திருப்பதாகவும் சிவராமன் கூறியுள்ளார்.

இத்தகைய செயல்பாடுகளால் மின்துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதை அடுத்து, ‘டான்ஜெட்கோ’ மீதும் முறைகேடாக ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவராமனின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2023ல் இதே புகார் எழுந்தபோது, அதை ‘டான்ஜெட்கோ’ நிறுவனம் முழுமையாக மறுத்தது.

குறிப்புச் சொற்கள்