திருவண்ணாமலை: திருவண்ணாமலை மலப்பம்பாடி ஏரியில் சட்டவிரோதமாக மண் திருட்டில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் எ.வ.குமரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2025 டிசம்பரில் மலப்பம்பாடி கிராமத்தில் நடைபெற்ற திமுக வடமண்டல இளைஞர் மாநாட்டை எ.வ.வேலு ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சி நடைபெற்ற ‘கலைஞர் திடல்’ நிலம் அவரது மகன் எ.வ.குமரனுக்குச் சொந்தமான ‘அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ்’ நிறுவனத்திற்கு உரியதாகும்.
அந்தத் திடலைச் சமன்படுத்துவதற்காக, அருகிலுள்ள மலப்பம்பாடி ஏரியிலிருந்து கிட்டத்தட்ட 12 ஏக்கர் பரப்பளவில் 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழத்திற்குச் சட்டவிரோதமாக மண் தோண்டி எடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் 1 மீட்டருக்கு மேல் மண் எடுக்க அனுமதி இல்லாத நிலையில், செல்வாக்கைப் பயன்படுத்தி எவ்வித அனுமதியுமின்றி 457,205,8 கன அடி மண் அள்ளப்பட்டு எ.வ.குமரனின் தனியார் நிலத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை, மாநகராட்சி, புவியியல் துறை அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயலால் அரசுக்கு ரூ.8 கோடிக்கும் மேல் நிதி இழப்பு ஏற்பட்டதுடன், அப்பகுதியின் விவசாயமும் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ‘அறப்போர் இயக்கம்’ அளித்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை தற்போது எ.வ.வேலு, எ.வ.குமரன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.
ஏற்கெனவே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு புகாரில் எ.வ.வேலு மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடைபெற்று வருகிறது.
