புதுச்சேரி: படப்பேரிக்குப்பம் சிற்றூரைச் சேர்ந்த மூன்று பேர் கடந்த மார்ச் 12ஆம் தேதி பத்துக்கண்ணு பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் பக்கத்து ஊரான சேதாரப்பட்டுக்குச் சென்றனர். அப்போது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனம் மீது அவர்களுடைய மோட்டார் சைக்கிள் மோதியது. அந்தச் சம்பவத்தில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்துக் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த விபத்தில் இறந்தவர்களில் ஒருவரான சரண்ராஜின் சகோதரர் முத்து, வில்லியனூர் காவல் நிலையத்திற்குச் சென்று, அந்த வழக்கு குறித்து விசாரித்து, அதன் முதல் தகவல் அறிக்கையின் நகலைத் தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு அங்கிருந்த துணை ஆய்வாளர் பாஸ்கர், ரூ.100,000 லஞ்சம் தந்தால் நீங்கள் கேட்ட அந்த நகல் கிடைக்கும் என்று பதிலளித்துள்ளார். அந்த துணை ஆய்வாளர் பாஸ்கரனிடம் நடந்த பேச்சுவார்த்தையை கைப்பேசியில் படம்பிடித்த முத்து, புதுச்சேரி காவல்துறை டிஜிபி அலுவலகத்திற்குச் சென்று சாட்சியத்துடன் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் டி.ஜி.பி. ஷாலினி சிங், துணை ஆய்வாளர் பாஸ்கரை தற்காலிகமாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். அந்தப் புகாரை நன்கு விசாரித்தபின், துணை ஆய்வாளர் பாஸ்கரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

