சென்னை: நடந்துமுடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில், விசிகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால், அதைச் சரிக்கட்டும் வகையில் அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், எஸ்.எஸ்.பாலாஜியை விசிக பொருளாளராகவும், ஆளூர் ஷாநவாஸை கட்சியின் முதன்மைச் செயலாளராகவும் நியமிப்பதாக அறிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் விசிக கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக 2 இடங்களைச் சேர்த்து 8 தொகுதிகளில் போட்டியிட்டது. இருப்பினும், எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகிய மூன்று பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் மூவரும் கடும் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், ஒரு முறை கூட வாய்ப்பு கிடைக்காதவர்கள் பலர் இருப்பதால் இந்த முடிவு எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டதாக திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் பேசும்போது, “ஓர் அரசியல் கட்சியில் யாருக்கு எப்போது எப்படி வாய்ப்பளிக்க வேண்டும் என்பது தலைமையின் முடிவாகும் என்றும், அது எதுவாயினும் ஏற்றுக் கொள்வதே சிறந்த அறமாகும் என்றும்,” தெரிவித்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ் இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கி அதிரடி அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து எஸ்.எஸ்.பாலாஜி வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில்,‘‘விசிக தலைவர் திருமாவளவனுக்கு நன்றி என்பதை வார்த்தைகளால் உரைப்பதைக் கடந்து, இயக்கப்பணி செயல்களால் உணர்த்துவேன்,” என்று தெரிவித்துள்ளார்.

