சென்னை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏன் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் நிகழ்ந்த கிரானைட் குவாரி முறைகேட்டை அம்பலப்படுத்தியவர் சகாயம். ஏறக்குறைய ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக அவர் தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
இதையடுத்து, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள சகாயம் உள்ளிட்ட பலருக்கு ஆயுதம் ஏந்திய காவலர் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அண்மையில் தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை தமிழக காவல்துறை திரும்பப் பெற்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் சகாயம்.
இதை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“முன்னாள் ஆட்சியர் சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை?, ஏன் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது?, அவருக்கு மீண்டும் உரிய பாதுகாப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்படுமா?,” என்று நீதிபதி லோகேஸ்வரன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழக அரசால் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது எனில், மத்திய பாதுகாப்புப் படை சார்பில் சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.