சென்னை: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தாம் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்றுள்ளார்.
இவற்றுள் ஒரு தொகுதியை அவர் விட்டுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் திருச்சி கிழக்கு தொகுதியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திரு சகாயத்தைக் களமிறக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நேர்மைக்குப் பெயர்பெற்ற திரு சகாயத்தை தேர்தலுக்கு முன்பே தவெகவில் இணைக்க விஜய் தரப்பு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், திரு சகாயம் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்கவில்லை.
தற்போது தேர்தலில் வெற்றிபெற்ற நிலையில், சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளைத் தன்னுடன் வைத்துக்கொண்டால் மக்களுக்குச் சிறந்த நிர்வாகத்தை அளிக்க முடியும் என விஜய் கருதுவதாகவும் அவர் விரைவில் சகாயத்தைத் தொடர்புகொண்டு பேச இருப்பதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
விரைவில் இருவரும் சந்திக்கக்கூடும் என்றும் அதன் பின்னர் விஜய் தலைமையிலான அரசில் திரு சகாயம் முக்கியமான பொறுப்புகளை ஏற்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு நடக்கும் பட்சத்தில், விஜய்யின் ஆட்சி நிர்வாகத்தில் திரு சகாயத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
முன்னதாக, திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகை திரிஷா களமிறங்க வாய்ப்பு உள்ளதாக செய்தி வெளியானது.

