முடக்கப்பட்ட சொத்துகளின் விற்பனையைப் பதிவு செய்ய முடியாது: நீதிமன்றம்

முடக்கப்பட்ட சொத்துகளின் விற்பனையைப் பதிவு செய்ய முடியாது: நீதிமன்றம்

படம்: தி இந்து

15 Nov 2026 - 5:44 pm

2 mins read

சென்னை: வருமான வரித்துறையும் நீதிமன்றமும் முடக்கிய சொத்துகளின் விற்பனை ஆவணங்களைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமான வரித் துறை மற்றும் கோவை கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட கோவையில் உள்ள ஒரு சொத்தை, சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த மகேஷ் கண்ணன் என்பவர் விலைக்கு வாங்கினார். முடக்கப்பட்ட சொத்து என்பதால் அதன் விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்ய முடியாது என கோவை சார் பதிவாளர் மறுத்துவிட்டார்.

இதை எதிர்த்து மகேஷ் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மோசடி அல்லது போலி ஆவணங்கள் தொடர்பான சொத்து விற்பனையை மட்டுமே பதிவுச் சட்டம் 22பி பிரிவின்கீழ் பதிவு செய்ய மறுக்க முடியும் என்றார். முடக்கப்பட்ட சொத்துகளைப் பதிவு செய்யத் தடையில்லை எனக் கூறிய அவர், மகேஷ் கண்ணனின் விற்பனைப் பத்திரத்தைப் பதிவு செய்யுமாறு சார் பதிவாளருக்கு உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, அந்தச் சொத்தைச் சட்டப்படி முடக்கி வைக்கக் கோவை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்ற கோவையைச் சேர்ந்த ஆசிக் அலி, அஜ்ஜூர் முகமது ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், ஆர். ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இம்மனு விசாரணைக்கு வந்தது. அப்போது மேல்முறையீட்டு மனுதாரர்கள் தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் மற்றும் வருமான வரித் துறையால் முடக்கி வைக்கப்பட்ட ஒரு சொத்தைப் பதிவு செய்யுமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என வாதிட்டார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வருமான வரித் துறை மற்றும் நீதிமன்றத்தால் முடக்கப்பட்ட சொத்துகளின் விற்பனையைச் சட்டரீதியாகப் பதிவு செய்ய முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

ஒரு விற்பனை ஆவணத்தைப் பதிவு செய்ய சார் பதிவாளர் சட்டபூர்வமாக மறுத்தால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யச் சட்டத்தில் மாற்றுத் தீர்வு முறைகள் உள்ளன என்றும், அதை விடுத்து நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடிப் பரிகாரம் தேட முடியாது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இதையடுத்து, மகேஷ் கண்ணனின் விற்பனைப் பத்திரத்தைப் பதிவுசெய்து கொடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவையும், அதன் அடிப்படையில் ஏற்கெனவே பதியப்பட்ட விற்பனைப் பத்திரத்தையும் ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்