எட்டயபுரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தென்தமிழகத்தின் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆட்டுச் சந்தை ஒன்றாகும். வாரந்தோறும் சனிக்கிழமையில் நடைபெறும் இந்த சந்தையில் விரும்பும் இன ஆடுகள் கிடைப்பது மட்டுமின்றி விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும் என்பதால் வியாபாரிகள் அங்கு கூடுவார்கள்.
வரும் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் எட்டயபுரம் ஆட்டுச் சந்தைக்கு சனிக்கிழமை பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்தனர்.
இதனை வாங்குவதற்காக நெல்லை, நாகர்கோவில், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, தேனி, சென்னை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்திருந்தனர். இவர்கள் போட்டிப் போட்டு கொண்டு ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
அதிகாலை முதலே எட்டயபுரம் சந்தைக்கு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள், மயிலம்பாடி, குறும்பை, சீனி ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
வளர்ந்த ஆடுகள் ரூ.7 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விலை போனது. சுமார் 7 ஆயிரம் ஆடுகள் ரூ.6 கோடிக்கு மேல் விற்பனை நடந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

