சென்னை: சனாதன தர்மம் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திரு.உதயநிதி அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எதையும் மீறவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, உதயநிதிக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்டவர்களால் திருப்பி பெறப்பட்டன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சனாதன எதிர்ப்பு மாநாட்டை நடத்தியது.
இதில் கலந்துகொண்டு பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் குறித்து தெரிவித்த கருத்துகள் சர்ச்சைக்கு வித்திட்டன. இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூன்று தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய தமிழக காவல்துறை தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவரது பேச்சு, அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
எனினும் விசாரணையின்போது இந்த வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இம்மனுக்கள் விசாரணைக்கு உகந்ததல்ல என கருத்து தெரிவித்தனர். இதையடுத்து மனுதாரர்கள் தங்கள் மனுக்களைத் திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
திரு.உதயநிதிக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.