சென்னை: தமிழகத்தில் நடந்துள்ள மணல் குவாரி முறைகேடு வழக்கு தொடர்பாக, திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (நவம்பர் 6) சோதனை மேற்கொண்டனர்.
கடந்த ஆட்சியின்போது இயங்கி வந்த அரசு மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு, ஏறக்குறைய ரூ.4,730 கோடி அளவுக்குப் பேரளவில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதுதொடர்பாக பத்து மாவட்ட ஆட்சியர்க்கு அழைப்பாணை அனுப்பப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில், விரிவான விசாரணை நடத்துமாறு தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை பரிந்துரைத்திருந்தது.
இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாகத் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை புதிய வழக்குப்பதிவு செய்து, வெள்ளிக்கிழமை காலை ஆறு மணி முதல் திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய மணல் குவாரி அதிபர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், அவர்களின் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
இதேபோல், திண்டுக்கல்லில் பிரபல தொழில் அதிபர் ரத்தினம் என்பவரது இல்லம், அலுவலகங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது வீடுகள், அலுவலகங்களின் கதவுகள் பூட்டப்பட்டு, வெளிநபர்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது.
மேலும், வழக்கு சார்ந்த முக்கியமான ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
