தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாலாற்றில் தடுப்பணை கட்டுவதாக மணல் கொள்ளை: காட்பாடி மக்கள் புகார்

2 mins read
297432c8-c079-4ed7-a7b9-b892ad17d55f
பாலாற்றின் மையப்பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகள் நடப்பதாகக் கூறி மணல் கொள்ளை நடப்பதாக காட்பாடி மக்கள் விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். (உள்படங்கள்: அமைச்சர் துரைமுருகன், ஒப்பந்தாரர் குமார்) - கோப்புப் படங்கள்: ஊடகம்

சென்னை: பாலாற்றில் மூன்று தடுப்பணைகள் கட்டப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் ஆற்றங்கரையிலேயே ரெடிமிக்ஸ் ஆலை அமைத்து மணலைக் கடத்துவதாகக் காட்பாடி மக்கள் குறை கூறியுள்ளனர்.

அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமவளத்துறை கடந்த மே மாதம் அமைச்சர் ரகுபதி கைக்கு மாற்றப்பட்டது. இருந்தபோதும் மணல் விவகாரங்களில் இன்னமும் துரைமுருகனின் கையே ஓங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது செல்வாக்கில் மணல் கொள்ளையர்கள் யாருக்கும் அஞ்சாமல் மணல் கடத்தும் வேளையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகக் காட்பாடி மக்கள் கூறுகின்றனர்.

மணல் கொள்ளையர்கள்மீது புகார் கொடுத்தாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் புகார் மனுக்களைக் கிடப்பில் போட்டு வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. முக்கியமாக மணல் கொள்ளை துரைமுருகனின் சொந்தத் தொகுதியான காட்பாடியில் உச்சத்தில் இருப்பதாகக் காட்பாடி மக்கள் தெரிவித்துள்ளனர்.

காட்பாடி தொகுதிக்குள் வரும் தண்டல கிருஷ்ணாபுரம் (டி.கே.புரம்), பாலாற்றை ஒட்டியுள்ள ஒரு கிராமம். இங்கு பாலாற்றின் மையப்பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

அமைச்சர் துரைமுருகனுக்கு வேண்டப்பட்ட பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர் குமார் என்பவருக்கே இந்தப் பணிகள் ஒதுக்கப்பட்டன. அமைச்சரின் மகள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் மற்றும் ஓட்டல் கட்டுமானங்களைக் கவனிக்கும் ஒப்பந்ததாரரும் இவர்தான் என்கிறார்கள்.

விருதம்பட்டு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஆதர்ஷிடம் கேட்டபோது, “டி.கே.புரம் பாலாற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவர்களைக் கைது செய்வது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் கேட்டுத் தான் நடவடிக்கை எடுக்க முடியும்,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்