சசிகலா, இபிஎஸ் மன்னிப்புக் கேட்டால் கட்சியில் சேர்க்கப்படலாம்: அதிமுக

சசிகலா, இபிஎஸ் மன்னிப்புக் கேட்டால் கட்சியில் சேர்க்கப்படலாம்: அதிமுக

2 mins read
2b4158c0-af33-4999-8613-0b8b19d9198a
அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்வதற்கு மன்னிப்புக் கேட்டுக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

கிருஷ்ணகிரி: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும் வெளியானவர்களும் மீண்டும் அதிமுகவில் சேர்வதற்கு விருப்பப்பட்டால் அவர்கள் கடிதம் மூலம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் அவர்களைக் கட்சியில் சேர்ப்பது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து தென்பெண்ணை ஆற்றில் நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதை கே.பி. முனுசாமி பார்வையிடச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அதிமுகவில் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்கிற கருத்தை ஊடகத்தினரும் சில அரசியல் விமர்சகர்களும் கூறி வருகின்றனர்.

அதிமுகவை எப்படியாவது உடைக்க வேண்டும் என நீதிமன்றம், காவல் நிலையம் சென்றவர்கள், கழகத்துக்குக் களங்கம் விளைவித்தவர்களை அடையாளம் கண்டறிந்து வெளியேற்றி இருக்கிறோம். தவறு இழைத்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பது அதிமுக சட்டவிதிகளில் இல்லை.

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்திலிருந்து தவறு இழைத்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் அவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் அதனைப் பொதுச் செயலாளர் முடிவெடுத்து விருப்பப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம் என்னும் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது.

அப்படி மீண்டும் அவர்கள் தவறு செய்யக்கூடும் எனத் தோன்றினால் அவர்களைக் கட்சியில் சேர்த்துக்கொள்வது தவிர்க்கப்படலாம். அது கட்சிப் பொதுச்செயலாளரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது.

தற்போது யார் மன்னிப்புக் கடிதம் கொடுத்துக் கட்சியில் சேர முன்வருகிறார்கள் என அவருடைய பெயரைக் கூறினால் நாங்கள் பரிசீலிக்கிறோம்.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா இருவரும் அறிவும் அனுபவமும் இல்லாதவர்கள் அல்ல. அவர்கள் சுயநலத்துடன் கருத்து கூறி வருகிறார்கள். அவர்கள் அதிமுகவின் நலன் கருதி கருத்துகளைக் கூறினால், அந்தக் கருத்துகளின் அடிப்படையில் அவர்களைக் கட்சியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வோம் என்று கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்