புதிய கட்சியைத் தொடங்கினார் சசிகலா; ஜெயலலிதாவின் உருவம் பொறித்த கொடி அறிமுகம்

புதிய கட்சியைத் தொடங்கினார் சசிகலா; ஜெயலலிதாவின் உருவம் பொறித்த கொடி அறிமுகம்

2 mins read
498b14b1-bb60-4c24-b52e-c0f671a5ea5d
கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் வி.கே. சசிகலா தெரிவித்தார். - படம்: தமிழ் முரசு

சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட வி.கே. சசிகலா, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான செவ்வாய்க்கிழமையன்று (பிப்ரவரி 24) உணர்ச்சிகரமான மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உரையை நிகழ்த்தினார். அப்போது தனது புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்தார்.

தனது புதிய கட்சியின் கொடியையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜெயலலிதா மறைந்த பிறகு நடந்த பரபரப்பான தருணங்களை நினைவுகூர்ந்த சசிகலா, “ஜெயலலிதா இறந்த அதே இரவில், அமைச்சர்கள் அனைவரும் வந்து என்னை முதல்வர் பதவி ஏற்கச் சொன்னார்கள். சட்டமன்ற உறுப்பினர்களும் அதையே சொன்னார்கள்,” என்றார்.

2016ஆம் ஆண்டு ஜெயலலிதா 72 நாள்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மாரடைப்பு காரணமாகக் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டது. அதிமுகவின் அதிகார மையமாக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு எழுந்த பல்வேறு புகார்கள் குறித்து பேசிய சசிகலா, “நான்தான் அவரைக் கொன்றதாக நமது எதிரிகள் கூறினார்கள்,” என்று குறிப்பிட்டார்.

“நான் அவருடன் ஒரு அரசியல்வாதியாகப் பழகவில்லை, எனது சொந்த சகோதரியாகவே பார்த்தேன். என்னால் முதல்வராகப் பொறுப்பேற்க முடியாது என்று அதிமுக அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரிடம் கூறினேன். ஓ. பன்னீர்செல்வமே முதல்வராகப் பொறுப்பேற்கட்டும், அமைச்சர்களும் அவரவர் பதவிகளில் தொடரட்டும் என்று நான் கூறினேன்,” என்றார்.

மூத்த தலைவர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னதாக நீக்கப்பட்டிருந்தாலும், அவரை மீண்டும் பணியமர்த்த தான் விரும்பியதாகவும் பதவியில் இருந்த அமைச்சர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்பதை உறுதி செய்ததாகவும் சசிகலா தெரிவித்தார்.

“இதுதான் நடந்தது,” என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்நிலையில், சிவப்பு, வெள்ளை மற்றும் கறுப்பு நிறப் பட்டைகளுடன் சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட தனது கட்சியின் கொடியைச் சசிகலா அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இது அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பாதையைப் பின்பற்றும் ஒரு திராவிடக் கட்சியாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கான இந்தக் கட்சி, எதிரிகளை வேரோடு அறுக்கும்,” என்று அவர் பிரகடனப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்