சசிகலாவின் கட்சிப் பெயர், சின்னம் அறிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் போட்டி

சசிகலாவின் கட்சிப் பெயர், சின்னம் அறிவிப்பு

3 mins read
a8c4a152-b9f0-4a5f-a07b-313a06bbfbf7
சசிகலாவின் புதிய கட்சி அஇபுதமமுக, சட்டமன்றத்தேர்தலில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் என அறிவிப்பு. - படம்: ஒன் இந்தியா

சென்னை: ‘அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற தனது கட்சியின் பெயரையும் தென்னந்தோப்புச் சின்னத்தையும் சசிகலா அறிவித்துள்ளார்.

எம்ஜிஆர், ஜெயலலிதாமீது பற்றுக்கொண்ட தொண்டர் ஒருவர் தொடங்கிய கட்சி இது என்றும் அதில் தன்னை இணைத்துக்கொள்வதாகவும் வெள்ளிக்கிழமை (மார்ச் 13) சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்தார்.

“வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் தென்னந்தோப்பு சின்னத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள். இது மக்களின் சின்னம். இது உங்கள் வீட்டுச் சின்னம். மக்கள் நிச்சயம் எங்களோடு இருப்பார்கள்,” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும், அதிமுகவின் முன்னாள் முக்கிய தலைவராகவும் இருந்த சசிகலா, பிப்ரவரி 24ஆம் தேதி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். தற்போது கட்சியின் பெயரை அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.

“தமிழ்நாட்டு மக்களை திமுக கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பார்த்த நான், இதற்கு ஒரு முடிவு கட்டும் எண்ணத்தில் புதிய கட்சிக்கான கொடியை அறிமுகம் செய்தேன்,” என்று அவர் உரையாற்றினார்.

இவரது நகர்வு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுக வட்டாரத்தில் ஒரு பெரும் திட்டமாகப் பார்க்கப்படுகிறது.

கட்சியின் பெயரிலேயே ‘புரட்சித் தலைவர்’ (எம்ஜிஆர்) ‘மக்கள் முன்னேற்றக் கழகம்’ ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்தியிருப்பது தற்செயலானது அல்ல என்று அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.

அதிமுக தொண்டர்களைக் கவரவும் அதிமுகவின் ஆணிவேரான எம்ஜிஆர் விசுவாசிகளைத் தம்பக்கம் இழுக்கவே இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவி கோரி சசிகலா தொடர்ந்த வழக்குகள் இன்னும் இழுபறியாகவே உள்ளதால், அதிமுகவைச் சட்டரீதியாகக் கைப்பற்ற நீண்ட காலம் பிடிக்கும். எனவே தமது ஆதரவாளர் தொடங்கிய கட்சியில் இணைவதன் மூலம், அவர் உடனடியாக அரசியலில் ஈடுபட முடியும்.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் தென் மாவட்டங்களில் சசிகலாவுக்கும் டி.டி.வி. தினகரன் ஆகியோருக்குக் கணிசமான செல்வாக்கு உள்ளது.

அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வமும் சசிகலாவும் ஓரங்கட்டப்பட்ட பிறகு, தென் மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கி சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சசிகலாவின் புதிய கட்சி அந்த வாக்குகளை ஒருங்கிணைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுகவின் கதவுகள் சசிகலாவுக்கு என்றும் மூடப்பட்டிருக்கும் என்று இபிஎஸ் தொடர்ந்து கூறி வருகிறார். வரும் காலங்களில் அதிமுகவின் அதிருப்தி நிர்வாகிகளைத் தனது புதிய கட்சிக்கு சகிகலா இழுக்க அதிக வாய்ப்புள்ளது.

அதிமுகவின் வாக்கு வங்கியில் தனது ‘பங்கு’ எவ்வளவு என்பதை நிரூபிப்பதே அவரது தற்போதைய இலக்கு. அதன் மூலம் அதிமுகவை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவோ அல்லது ஒரு வலுவான அதிகார மையமாக மாறவோ அவர் திட்டமிடுகிறார் என்று கூறப்படுகிறது.

ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து, தமிழ்நாட்டின் சக்திவாய்ந்த பெண்மணியின் தோழி, ஆளும் கட்சியின் தலைவர் என்ற நிலைவரை உயர்ந்த சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் நம்ப முடியாத பல திருப்பங்களையும் ஏற்ற இறக்கங்களையும் கொண்டது.

அதிமுகவிலிருந்து விலகிய பின்னர் சசிகலாவின் அரசியல் நகர்வுகள் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகின்றன. 2026 தேர்தலில் தென்னந்தோப்பு சின்னம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்