சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேருக்கு மனநலச் சோதனை

சாத்தான்குளம் கொலை வழக்கு: ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேருக்கு மனநலச் சோதனை

படங்கள்: மாலை மலர்

27 Mar 2026 - 7:53 pm

2 mins read

மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் அதே பகுதியில் கைப்பேசி கடை நடத்தி வந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது நேரக் கட்டுப்பாட்டை மீறி கடையைத் திறந்து வைத்ததாகத் தந்தை, மகன் இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு இருவரையும் காவல்துறையினர் கொடூரமாகத் தாக்கியதில் படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தனர். காவல்துறை விசாரணையில் தந்தை, மகன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி இந்த வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட் தீர்ப்பு வழங்கினார்.

அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட ஒன்பது காவல்துறை அதிகாரிகளும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களது தண்டனை விவரம் வருகிற 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

தீர்ப்பின்போது கடந்த ஐந்து ஆண்டுகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் உள்ளனர். அவர்களது உடல்நலம் மற்றும் மனநலம் எப்படி என்று தெரியவில்லை. எனவே அவர்களது உடல் மற்றும் மனநலம் குறித்து உரிய பரிசோதனை நடத்தி வரும் 30ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின் உடல்நிலை மற்றும் மனநிலை குறித்து பரிசோதனை செய்ய மதுரை அரசு மருத்துவமனையில் தனி அறை அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள ஒன்பது காவல்துறை அதிகாரிகளுக்கு 27ஆம் தேதியும் 28ஆம் தேதியும் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.

குறிப்புச் சொற்கள்