சாத்தான்குளம் இரட்டைக்கொலை: உண்மையைச் சொல்ல காவல்துறை அதிகாரி விருப்பம்

2 mins read
1de19120-9308-4c58-87bd-51ecc20a7ecb
சாத்தான்குளத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உயிரிழந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். - படம்: ஊடகம்

மதுரை: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், அரசுத் தரப்பு சாட்சியாக மாற விரும்புவதாக மதுரை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜையும் அவரது மகன் பென்னிக்ஸையும் 2020 ஜூன் 19ஆம் தேதி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர்.

அந்தச் சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 காவல்துறையினர் மீது சிபிஐ கொலை வழக்குப் பதிந்தது.

மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அந்த வழக்கின் விசாரணை நடக்கிறது.

விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஸ்ரீதர் 7வது முறை தாக்கல் செய்த பிணை மனுவை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முத்துக்குமரன் முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஸ்ரீதர் தரப்பு தாக்கல் செய்த மனுவில், “குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்.

“அரசு, காவல்துறைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக நான் அப்ரூவராக (அரசுத் தரப்பு சாட்சியாக) மாற விரும்புகிறேன். என்னைத் தவிர்த்து, மற்ற காவல்துறையினர் சம்பவத்தின் போது செய்த செயல்கள் குறித்த உண்மையை நீதிமன்றத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

“தந்தை, மகனை இழந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். அரசுத் தரப்பு சாட்சியாக மாற விரும்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவின் அடிப்படையில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “ஜூலை 24ல் ஸ்ரீதர் முன்னிலையாக வேண்டும். அன்று சிபி.ஐ மற்றும் ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்,” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்