சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: காவல்துறையினர் ஒன்பது பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு: காவல்துறையினர் ஒன்பது பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு

2 mins read
6a23bf52-52d0-4b4b-93de-8376c1e88476
ஜெயராஜ், பென்னிக்ஸ். - கோப்புப் படங்கள்: தினத்தந்தி

மதுரை: சாத்தான்குளம் இரட்டைக் கொலை தொடர்பான வழக்கில் திங்கட்கிழமை (மார்ச் 23) தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ். இருவரும் உள்ளூரில் கைப்பேசி கடை வைத்து தொழில் செய்துவந்தனர்.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டு கொவிட்-19 தொற்றுப்பரவல் காலத்தில் ஊரடங்குத் தடையை மீறி, ஜெயராஜ் தனது கடையைத் திறந்து வைத்ததாகக் காவல்துறை புகார் எழுப்பியது.

கடையை அடைப்பது குறித்து ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், இருவரும் பிறகு வீடு திரும்பவில்லை. மாறாக, இருவரும் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.

இரவு முழுவதும் நடந்த விசாரணையின்போது காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதாலேயே தந்தையும் மகனும் உயிரிழந்துவிட்டதாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டினர். அவ்வாறே வழக்கும் பதிவு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் இச்சம்பவம் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.

சம்பவம் நடந்தபோது காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முத்துராஜ், சாமிதுரை, செல்லதுரை உள்ளிட்ட ஒன்பது பேர் கொலைக் குற்றச்சாட்டை எதிர்நோக்கினர்.

அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முதற்கட்டமாக 2,027 பக்க குற்றப்பத்திரிகையும் இரண்டாம் கட்டமாக 400 பக்க குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பு வழங்கினார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இறந்துவிட்டதால் மற்ற ஒன்பது பேரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

அப்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி, காவல்துறையினர் கம்பி உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு தாக்கியதால்தான் ஜெயராஜ் இறந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஜெயராஜுக்கு நுரையீரல் பிரச்சினை இருந்தபோதும் அதனால் அவர் இறக்கவில்லை என்றும் காவல்துறையினரால்தான் அவருக்குக் காயங்கள் ஏற்பட்டன என்பது உடற்கூறாய்வு மூலம் தெரியவந்துள்ளது என்றும் நீதிபதி கூறினார்.

மரணத்தை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் தந்தை, மகன் இருவரது உடல்களிலும் காணப்பட்டதால்தான் சிபிஐ அதைக் கொலை வழக்கு எனக் குறிப்பிட்டுள்ளது என்றார் நீதிபதி.

இருவர்மீதும் போடப்பட்டது பொய் வழக்கு என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒன்பது பேரும் குற்றவாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், தண்டனை விவரங்கள் மார்ச் 30ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்