சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் கோடைக்காலத்தில் வெப்பம் முந்தைய ஆண்டைவிட அதிகளவில் இருந்துவருகிறது.
தமிழகம் மட்டுமின்றி உலகளவில் அதிகரிக்கும் வெப்பத்தைத் தணிக்க மக்கள் சிரமப்படுகின்றனர். பொதுவாகவே கோடைக்காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில், இவ்வாண்டு சென்னையில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழகத்தில் அடுத்த 3 நாள்களுக்கு இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
“அதிக வெப்பநிலையும் அதிக ஈரப்பதமும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பைவிட இரண்டிலிருந்து மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
“சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34லிருந்து 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்,” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே வெப்பம் அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் இந்த ஆண்டு வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளதாக மாலை மலர் ஊடகம் தெரிவித்துள்ளது.