சென்னை: கடல்மட்டம் உயர்ந்து வருவதால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட ஏழு கடலோர மாவட்டங்கள் ஆபத்தை எதிர்கொள்வதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பருவநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ஆ.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 1991ஆம் ஆண்டு இருந்த கடல்மட்ட உயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அதிகப்படியான கரியமில வாயு வெளியேற்றத்தால் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 78.15 சென்டி மீட்டர் வரை உயரக்கூடும்.
ஆய்வின் மூலம் பகுதி வாரியாகத் திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், இந்தியாவில் ஆண்டுதோறும் 3.4 மில்லிமீட்டர் அளவுக்கு கடல்மட்ட உயர்வு இருக்கும் என இந்திய அரசு மதிப்பிட்டுள்ளது என்று திரு ராமச்சந்திரன் கூறினார்.
நாடு முழுதும் ஒன்பது மாநிலங்கள், நான்கு யூனியன் பிரதேசங்களில், 69 மாவட்டங்களில் கடல்மட்ட உயர்வு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறிப்பாக, 1991-2023 வரையிலான காலகட்டத்தில் கடல்மட்டத்தில் ஏற்பட்ட மாற்ற விவரங்கள், செயற்கைக்கோள் வாயிலாக திரட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆய்வின்மூலம் தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், ஆந்திராவில் நெல்லுார், மேற்கு வங்கத்தில் சுந்தரவனம், கேரளாவில் திருச்சூர், மகாராஷ்டிராவில் ராய்காட், குஜராத் மாநிலம் கட்ச் ஆகிய நகரங்கள் கடல்மட்ட உயர்வால் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
“தமிழகத்தைப் பொறுத்தவரை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலுார், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் பாதிப்புகள் அதிகரிக்கும். கடல்மட்டம் உயரும்போது, கடல் நீர் ஊருக்குள் வருவதைவிட, நிலப்பகுதியிலிருந்து வெள்ளநீரைக் கடலுக்கு வெளியேற்றுவதில் தாமதம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்,” என்று பேராசிரியர் ராமச்சந்திரன் கூறினார்.
நாடு முழுதும் கடல்மட்டம் உயரும் வாய்ப்புள்ள 69 மாவட்டங்கள் குறித்த தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த 14 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தூத்துக்குடியில் கடல் மட்டம் ஆண்டுக்கு -0.17 மி.மீ என்ற அளவில் சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஆண்டுக்கு 0.55 மி.மீ என்ற அளவில் கடல் மட்டம் உயர்ந்துள்ளது. இது பெருநகர கடலோரப் பகுதிக்கு ஒரு பெரிய ஆபத்து என்று எச்சரிக்கிறது.
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், தமிழக கடற்கரையில் கடல் மட்டம் 27.5 செ.மீ முதல் 1.1 மீட்டர் வரை உயரக்கூடும். இது கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால் இன்னும் அதிகமாகும். இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1991 முதல் 2023 வரை வங்காள விரிகுடாவில் 62 புயல்கள் உருவாகியுள்ளன. இதில் பெரும்பாலான புயல்கள் பருவமழைக்குப் பிந்தைய காலத்தில் தாக்கியுள்ளன. கடல் மட்டம் உயரும்போது புயல் அலைகளும் அதிகரிக்கும்.
கடல் சுவர்களை கட்டுவது, சதுப்பு நிலங்களை உருவாக்குவது, சமூகத்தின் உதவியுடன் கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், கடலோரப் பகுதிகளைப் பாதுகாப்பதற்கும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தான் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று பேராசிரியர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.


