தவெக தலைமையில் உருவானது மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி

தவெக தலைமையில் உருவானது மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி

2 mins read
074d143c-efce-4a34-ae73-e87583439905
தவெக தலைவர் விஜய் (நடுவில்), காங்கிரஸ் நிர்வாகி மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் தொல் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட முக்கியமான அரசியல் தலைவர்கள் கூட்டத்தில் நேரில் பங்கேற்றனர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையிலான புதிய அரசியல் கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என அதிகாரபூர்வமாகப் பெயரிடப்பட்டுள்ளது.

தவெக கூட்டணிக் கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் முக்கியப் பிரமுகர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

அதில் தவெக தலைவர் விஜய், காங்கிரஸ் நிர்வாகி மாணிக்கம் தாகூர், விசிக தலைவர் தொல் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட முக்கியமான அரசியல் தலைவர்கள் நேரில் பங்கேற்றனர்.

கூட்டத்தின் நிறைவில், கூட்டணியின் அதிகாரபூர்வ பெயர் முறைப்படி அறிவிக்கப்பட்டது. இக்கூட்டணியில் தவெக, காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய ஐந்து முக்கியக் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

அதேவேளையில், தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்திருந்த இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் இக்கூட்டணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தலைவர்கள், இது வெறும் சாதாரண தேர்தல் கூட்டணி மட்டுமல்ல என்றும் இந்திய அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக அம்சங்களையும் பாதுகாக்கும் ஒரு கருத்தியல் கூட்டணி என்றும் வலியுறுத்தினர்.

மேலும், விரைவில் நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கான தவெக கூட்டணி வேட்பாளர்களின் பெயர் விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி’ எனப் பெயரிடப்பட்டிருந்த நிலையில், தற்போது உருவாகியுள்ள ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ தமிழக அரசியல் சூழலில் ஒரு புதிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், சமூக நீதி, மதச்சார்பின்மையின் அடிப்படையில் முதல்வர் விஜய் தலைமையில், தமிழகத்தின் நன்மைக்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்றும் அதே நேரத்தில் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை, அந்தக் கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்யும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இண்டியா கூட்டணி வேட்பாளரை ‘மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி’ ஏற்றுக்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்