காவலாளி அஜித்குமார் கொலை: சிபிஐ இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல்

1 mins read
d9a0d064-3d75-44bc-9a47-8579bae6737b
அடித்துக் கொல்லப்பட்ட காவலாளி அஜித் குமார். - படம்: ஊடகம்

மதுரை: சிவகங்கை மாவட்டத்தில் கோவில் காவலாளி அஜித் குமார் கொல்லப்பட்ட வழக்கில் சிபிஐ தனது இறுதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது.

திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் கோவில் காவலாளியான அஜித் குமாரை அடித்துக் கொன்ற வழக்கில் திருப்புவனம் காவல் நிலையத்தில் பணியாற்றிய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 

மானாமதுரை காவல்துறை துணை கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 

இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு  (சி.பி.ஐ) விசாரித்து வருகிறது.

கொலை நடைபெற்றது எவ்வாறு என்பதை தீர விசாரித்து ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ.க்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை கெடு விதித்திருந்தது. 

இதனால் அந்த தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளில் சி.பி.ஐ. தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், கைதான ஐவரின் நீதிமன்றக் காவல் கடந்த 13ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் காவலை மேலும் 15 நாள்கள் நீட்டித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கார் நிறுத்தும் இடத்தைவிட்டு பேராசிரியை நிகிதாவின் கார் வெளியே செல்லாதது, நகைத் திருட்டு சம்பவத்தில் உண்மையில் நிகழ்ந்தது போன்றவை தொடர்பான தகவல்கள் அந்தக் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்