தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விஜய் கூட்டத்தில் பாதுகாப்புக் குறைபாடு; உள்துறை அமைச்சு விசாரணை

2 mins read
138e3faa-dc38-4f74-acd0-48c37e95706d
விஜய் கூட்டமேடையில் செருப்பு வீசப்பட்ட சம்பவம் தமிழக வெற்றிக் கழகக் கட்சியினராலேயே நிகழ்த்தப்பட்ட சம்பவம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தொழிலதிபர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் என புகழ்பெற்றவர்களுக்கு மத்திய அரசு ‘ஒய்’, ‘இசட்’ எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக உளவுத் துறை ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் முதல் த.வெ.க.தலைவர் விஜய்க்கு மத்திய உளவுத்துறையின் பரிந்துரையின் பேரில் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மீது ஒருவர் காலணி வீசினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தவெக தலைவர் விஜய்யின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே அக்கட்சியினர் செருப்பை வீசி எறிந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

செருப்பு வீச்சு சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் புகார் தொடர்பாக விஜய்யின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சு விளக்கம் கேட்டுள்ளது.

கரூர் பிரசாரக் கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்புக் குறைபாடு இருந்ததா என அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சு விளக்கம் கேட்டுள்ளது. அதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் விஜய்க்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கரூர் அசம்பாவிதம் குறித்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கரூர் தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி, பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, பாதிக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து, இந்தத் துயர நிகழ்வு தொடர்பான விசாரணை, பதவியிலிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் நடைபெற பரிந்துரைத்துள்ளது.

இந்த நிலையில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் திமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சாராய அமைச்சருமான திரு.செந்தில் பாலாஜி, புதிய கதைகளைக் கூறியுள்ளார்.

இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கையில், இவர் இப்போது செய்தியாளர் சந்திப்பு நடத்தி, அவை எல்லாம் வதந்தி என்று கூறுவதற்கான அவசியம் என்ன என்ற கேள்விகள் எழுகின்றன என்று திரு அண்ணாமலை அவரின் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்