வேலூர்: தமிழகத்தில் மொத்தக் கட்சிகளும் அமைத்துள்ள கூட்டணியை ஒற்றைக் கட்சியான நாம் தமிழர் மோதி வெல்லும் என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேரிடர் காலத்திற்குத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
திமுகவில் கனிமொழிக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், பிறகு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மட்டும் எப்படி தொகுதிகளை ஒதுக்குவார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
ஒரு தொகுதிக்காக திமுக தலைமையிடம் சரண் அடையாமல் மக்களை எச்சரிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனைப் பாராட்டலாம் என்றார் சீமான்.
“சுற்றுச்சூழலுக்கு எந்தக் கேடும் தராத சூரிய ஒளி, காற்றாலை மின்சாரம் இதையெல்லாம் தனியார் முதலாளிகளுக்கு கொடுத்துவிட்டோம். அதற்கு பல நூறு ஏக்கர் நிலங்களை, விளைநிலங்களைப் பறித்துக்கொடுத்து, சூரிய ஒளியில் மின் தகடுகள் போடுவது, காற்றாலை மின்சாரத்தை எல்லாம் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டும் தொழிலாகக் கொடுத்துவிட்டனர்,” என்று சீமான் கூறினார்.
தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி விநியோகிப்பதால் தமிழக அரசுக்கு பல லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசு ஏன் மின் உற்பத்தியில் முதலீடு செய்யவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.
“சரியான, சமமான, தரமான கல்வியை நாட்டு மக்களுக்குக் கொடுத்துவிட்டோம் என்று இன்றைய ஆட்சியாளர்களால் சொல்ல முடியுமா? மருத்துவத்தின் தரத்தை உயர்த்திவிட்டது என் நாடு என்று சொல்ல முடியுமா? தடையற்ற மின் உற்பத்தி வினியோகம் பயணிக்க சரியான பாதை, தரமான போக்குவரத்தை விட்டார்களா?” என அவர் மேலும் பல கேள்விகளைத் தொடுத்தார்.

