சென்னை: தமது கைப்பேசி அழைப்புகளும் ஒட்டுக்கேட்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இதே போன்ற புகாரை எழுப்பிய நிலையில், சீமானும் இவ்விவகாரத்தில் தமிழக அரசை சாடியுள்ளார்.
பாஜக நிர்வாகிகள் தொலைபேசியில் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், கடந்த 20 ஆண்டுகளாக தமது கைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.
“இந்திய அளவில் கைப்பேசி ஒட்டுக் கேட்கப்படும் 50 தலைவர்களில் நானும் ஒருவன். இது அநாகரிகமானது. இந்நாட்டில் தனி மனித சுதந்திரம் என்பது இல்லை.
“நீட் தேர்வால் உயிரிழந்தவர்களுக்கு அதிமுக சார்பில் கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடத்தியுள்ளனர். தேர்தல் திருவிழா வரும்போது இதுபோன்ற நாடகங்கள் நடப்பதுதான்.
“திமுக ஆட்சியில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக பெருமையுடன் சொல்கிறார் முதல்வர்.
இதில் என்ன பெருமை இருக்கிறது. இதன்மூலம் ஒரு லட்சம் பிரச்சினைகளை மக்களுக்கு தந்திருக்கின்றனர் என்பதே உண்மை,” என்றார் சீமான்.