தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காவலரைத் தாக்கியதாக சீமானின் காவலாளி கைது

2 mins read
8ae5bdf9-47d3-4e6c-89cb-3f2dac06a333
சென்னை, நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் நுழைந்த காவலர் ஒருவரை சீமானின் காவலாளி தாக்கியதாகக் கைது செய்யப்பட்டுள்ளார். - படம்: தினத்தந்தி

சென்னை: சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகும்படி வளசரவாக்கம் காவல்துறையினர், சீமான் வீட்டுக் கதவில் ஓர் அறிக்கையை ஒட்டிச் சென்றனர். அந்த அறிக்கை சில நிமிடங்களிலேயே கிழித்தெறியப்பட்டது. அந்த அறிக்கையைக் கிழித்தது ஏன் என்று காவலர்கள் விசாரிப்பதற்காகச் சீமானின் வீட்டிற்குள் செல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்திய சீமானின் காவலர் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது சீமானின் காவலாளி, காவல் துறையினரைத் தாக்கியதோடு கையில் துப்பாக்கியையும் எடுத்துக்காட்டி அச்சுறுத்தியுள்ளார்.

இதையடுத்து, அந்தக் காவலாளியைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்ற காவலர்கள், அவரைக் கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். காவலாளியிடம் இருந்த கைத் துப்பாக்கியையும் காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை மணமுடிப்பதாகக் கூறி தாகத உறவு வைத்துக்கொண்ட பிறகு, ஏமாற்றி விட்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் சீமான்மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரிய மனுவைக் கடந்த 17ஆம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பாலியல் வன்கொடுமை வழக்கை ஒருபோதும் தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறியதோடு, பன்னிரெண்டு வாரத்திற்குள் இந்த வழக்கை காவல்துறை விசாரித்து அறிக்கை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ஆனால், சீமான் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் சங்கர், சீமான் விசாரணைக்கு முன்னிலையாக நான்கு வாரம் அவகாசம் கேட்டிருந்தார்.

இந்நிலையில், சீமான் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) காலை 11 மணிக்குச் சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும் என்று, நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் காவல்துறை அதிகாரிகள் அறிக்கை ஒட்டினர்.

குறிப்புச் சொற்கள்