மதுரை மேற்கில் மீண்டும் களமிறங்கும் செல்லூர் கே.ராஜூ

2 mins read
a6366258-558e-4f06-a812-6219d4bdfaf4
அதிமுகவின் மதுரை மாவட்டச் செயலாளர் திரு செல்லூர் கே.ராஜூ, வரும் சட்டமன்றத் தேர்தலில் 4வது முறையாக மதுரை மேற்குத் தொகுதியில் போட்டியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. - படம்: தினமணி

மதுரை: 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நான்காவது முறையாக மதுரை மேற்குத் தொகுதியில் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. இதற்கு அச்சாரமாக மேற்குத் தொகுதி நிர்வாகிகளுக்கு மட்டும் பொங்கல் ரொக்கப்பரிசு வழங்கி உற்சாகப்படுத்தி உள்ளார்.

அதிமுகவில் மதுரை மாநகர மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உள்ளார். இவர், தற்போது மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாக உள்ளார்.

நான்காவது முறையாக மேற்கில் போட்டியிடுவாரா? தொகுதி மாறுவாரா? என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடம் இருந்து வந்தது. அதற்கு ஏற்ப செல்லூர் ராஜூவும் மாநகரில் உள்ள 4 தொகுதிகளுக்கும் அதிமுக தலைமையிடம் விருப்பமனு கொடுத்திருந்தார்.

இந்நிலையில் திங்கட்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய செல்லூர் ராஜூ, ‘‘மேற்குத் தொகுதி மக்கள்தான் என்னை இந்த நிலைக்கு உயர்த்தினர்,” என்று உருக்கமாகப் பேசினார்.

நான்காவது முறையும் இந்தத் தொகுதியில் போட்டியிடப் போகிறேன். பொதுச்செயலாளர் பழனிசாமி பார்த்து ‘சீட்’ கொடுப்பார் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

அவரது இந்தப் பேச்சால், மதுரை மேற்குத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் அவர்தான் என்பது உறுதியாகியுள்ளது.

வரும் தேர்தலில் மதுரை மேற்கில் போட்டியிடுவதற்கு செல்லூர் ராஜூவுக்கு விருப்பம் இல்லை எனவும் அமைச்சர் பி.மூர்த்தியின் நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது.

செல்லூர் ராஜூவுக்கு இந்த முறை மேற்கில் போட்டியிட ஆர்வமே இல்லை. தமிழக வணிக வரி, பதிவுத்துறை அமைச்சரும் மதுரை கிழக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான பி.மூர்த்தியின் நெருக்கடியே, மீண்டும் அவர் மேற்குத் தொகுதியில் போட்டியிடக் காரணம் என்று கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் செல்லூர் ராஜூவுக்கு மேற்கு, ஆர்.பி.உதயகுமாருக்கு திருமங்கலம், வி.வி.ராஜன் செல்லப்பாவுக்கு திருப்பரங்குன்றம் என ‘சீட்’களை உறுதி செய்து அவரவர் தொகுதிகளில் பணிகளைத் தொடங்க கட்சித் தலைமை கூறியுள்ளதாக அதிமுகவின் நிர்வாகிகள் சிலர் கூறியுள்ளனர். மற்ற தொகுதிகளின் வேட்பாளர்கள்தான் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்