செல்வப்பெருந்தகை கூறிய பெட்ரோல் கதை; அதிருப்தியில் திமுக தலைமை

2 mins read
29c71402-3499-4e5f-8e08-b9edf3dc6f90
செல்வப்பெருந்தகை. - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் இண்டியா கூட்டணி வலிமையுடன் உள்ளது என்றும் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இம்முறை காங்கிரஸ் இல்லாமல் திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சு திமுக, காங்கிரஸ் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அறந்தாங்கி உள்ளிட்ட தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தொகுதிப்பங்கீடு குறித்த இறுதி முடிவை காங்கிரஸ் கட்சித் தலைமைதான் எடுக்கும் என்றார்.

“கூட்டணி என்பது ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பதல்ல. ஒன்றும் ஒன்றும் பதினொன்று என்பதே சரி.

“900 மில்லி லிட்டர் பெட்ரோல் உங்களிடம் இருக்கிறது. என்னிடம் 100 மில்லி லிட்டர் பெட்ரோல் உள்ளது. நீங்கள் இங்கிருந்து திருச்சி விமான நிலையம் செல்ல வேண்டுமென்றால் 1,000 மில்லி லிட்டர் பெட்ரோல், அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் தேவை.

“900 மி.லி பெட்ரோல் போட்டால் நீங்கள் விமானத்தைப் பிடிக்க முடியாது. நடுவழியில் நின்றுவிடுவீர்கள். இந்த 100 மி.லி பெட்ரோலும் அதில் சேர்த்தால்தான் விமானத்தைப் பிடிக்க முடியும்,” என்றார் செல்வப்பெருந்தகை.

தாம் சொல்ல நினைத்ததை, இதைவிட தெளிவாக விளக்கிச் சொல்ல முடியாது என்றும் இந்தியாவில் எல்லா கட்சிகளுக்கும் இந்தக் கூட்டணிக் கணக்கு பொருந்தும் என்றார்.

பெட்ரோல் கதையின் மூலம் 900 மி.லி என்பது திமுக, 100 மி.லி என்பது காங்கிரஸ் என்பதை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.

இதனால் திமுக தலைமை அவர் மீது அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்