பகுதி மின்கடத்தி திட்டம்: ஜப்பானிய நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சு

பகுதி மின்கடத்தி திட்டம்: ஜப்பானிய நிறுவனத்துடன் தமிழக அரசு பேச்சு

2 mins read
5663c4c6-cfef-4af1-81a2-8b03d425bad4
முதல்வர் விஜய்யுடன் கட்சுஹிகோ யோஷிடா. - படம்: தமிழக முதல்வர் அலுவலகம்

சென்னை: தமிழகத்தில் பகுதி மின்கடத்தி ஆலை நிறுவுவது தொடர்பாக ஜப்பானிய நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, முதல்வர் ச.ஜோசப் விஜய்யும் மைன்பியா மிட்சுமி நிறுவன நிர்வாகிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மொத்தம் 1,980 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக உள்ள பகுதி மின்கடத்தி ஆலை, திருவள்ளூரில் அமைக்கப்பட முன்மொழியப்பட்டுள்ளது.

இந்த ஆலை, பகுதி மின்கடத்தி மற்றும் உயர் மதிப்பு உற்பத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்கான தமிழக அரசின் முயற்சிகளின் ஒரு பகுதி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மைன்பியா மிட்சுமி நிறுவனத் தலைவர் கட்சுஹிகோ யோஷிடாவையும் அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளையும் திரு விஜய் சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், திருவள்ளூரில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள ஆலை குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைன்பியா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான ஷோஜி ஷிஷிடோ, இந்திய வணிக மேம்பாட்டு அலுவலகத் தலைவர் டேசுகே மட்சுடா, துணைத் தலைவர் மோக்கா கியோஹாரா, சாம் ஜார்ஜ் உள்ளிட்ட நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றதையும் அந்தப் பதிவு குறிப்பிட்டது.

புதிய திட்டத்திற்காக ஏற்கெனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இருதரப்பு ஈடுபாட்டை உறுதிசெய்யும் விதமாக இந்தக் கலந்துரையாடல் அமைந்ததாகவும் தமிழகத்தில் உள்ள முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் உள்ள ஒருங்கிணைப்பை எடுத்துக்காட்டுவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.

அதிக மதிப்புள்ள உற்பத்தி, பகுதி மின்கடத்தி சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதற்கும் ஜப்பானிய நிறுவனங்களுடன் தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் தமிழக அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக அண்மைய சந்திப்பு பார்க்கப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஈராண்டுகளாக பகுதி மின்கடத்தித் துறையில் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது.

அண்மையில், இந்தியப் பிரதமர் திரு மோடி நெதர்லாந்து சென்றிருந்தார்.அப்போது நெதர்லாந்த உதவியுடன் குஜராத்தில் பகுதி மின்கடத்தி ஆலை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

குறிப்புச் சொற்கள்