ஈரோடு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட, விலகி நிற்கும் தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி உள்ளார்.
கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் இணைக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் தாம் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகப் பனிப்போர் நீடித்து வருகிறது.
பழனிசாமி தன்னிச்சையாக முடிவெடுத்துச் செயல்படுவதாகவும் இதன் காரணமாக, அதிமுக தேர்தல்களில் தொடர் தோல்வி கண்டுள்ளதாகவும் செங்கோட்டையன் தரப்பு அதிருப்தி தெரிவித்துள்ளது.
அதன் உச்சமாக, வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 5) செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமது கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி செவிசாய்க்காவிட்டால், அதிமுகவில் உள்ள முக்கியத் தலைவர்களுடன் இணைந்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாக எச்சரித்தார்.
பத்து நாள்களுக்குள் பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை அதிமுக தலைமை தொடங்க வேண்டும் என்றும் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

