விஜய்யுடன் கைகோக்கும் செங்கோட்டையன்; விரைவில் இணைவார் என எதிர்பார்ப்பு

2 mins read
25203b98-b772-467e-b1df-f819517b5ff9
விஜய், செங்கோட்டையன். - படம்: ஊடகம்

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக வெளியான தகவல் தமிழக அரசியல் களத்தில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் வியாழக்கிழமை (நவம்பர் 27), விஜய் முன்னிலையில் தவெகவில் தம்மை இணைத்துக்கொள்வார் எனக் கூறப்படுகிறது.

கட்சித் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டதால் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் அண்மையில் நீக்கப்பட்டார். அதிமுக சார்பாக ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன். அக்கட்சியின் மூத்த உறுப்பினராகவும் முக்கியமான தலைவராகவும் இருந்து வந்தார்.

அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரும் மீண்டும் கட்சியில் இணைக்கப்பட வேண்டும் என்று அவர் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்தார்.

இதற்காக பத்து நாள்கள் கெடு விதித்ததை அடுத்து, மூத்த நிர்வாகி என்றும் பாராமல் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார் இபிஎஸ்.

இதையடுத்து அவர் டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இணைந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அவர் தவெகவில் இணையப்போவதாக வெளியான தகவல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணங்களைத் திட்டமிட்டு வழிநடத்தக்கூடிய அளவுக்கு அனுபவம் பெற்றவர் செங்கோட்டையன். எனவே, அவரைப் போன்ற மூத்த தலைவரை கட்சியில் சேர்த்து அவருக்கு தேர்தல் களத்தில் முக்கியமான பொறுப்பை வழங்க தவெக தலைவர் விஜய் திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் வியூக ஆலோசகர், பிரசாரப் பயணத் திட்ட ஏற்பாட்டாளர் என்று ஏதேனும் சில பொறுப்புகளை செங்கோட்டையனுக்கு ஒதுக்குவது தொடர்பாக விஜய் தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக ஏசியாநெட் தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

பெரும்பாலும், நவம்பர் 27ஆம் தேதி செங்கோட்டையன் தவெகவில் இணைவது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்