தவெகவில் இணைந்த செங்கோட்டையன்: முக்கியப் பதவி அளித்த விஜய்

2 mins read
40851274-7b9f-4fd7-b833-a5a2ebe0a7a1
செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற விஜய், செங்கோட்டையன். - படம்: ஊடகம்

சென்னை: அரசியல் களத்தில் நிலவிய எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

முன்னதாக, புதன்கிழமை (நவம்பர் 26) தமது கோபிசெட்டிப்பாளையம் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள விஜய்யின் வீட்டுக்குச் சென்ற செங்கோட்டையன், அங்கு அவருடன் இரண்டு மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, அவர் வியாழக்கிழமை, விஜய் முன்னிலையில் தவெகவில் அதிகாரபூர்வமாக இணைந்தார். இதே நிகழ்வில் அவரது ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர்.

செங்கோட்டையனுக்கு தவெகவின் நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அமைப்புச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்துடன் இணைந்து, செங்கோட்டையன் செயல்படுவார் என்று விஜய் அறிவித்துள்ளார்.

இதனிடையே, புதுவை பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் முன்னாள் எம்எல்ஏ ஹசன்னா ஆகியோரும் தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அனுபவம் மிக்க அரசியல் தலைவரும், எட்டு முறை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராகச் செயல்பட்டவரும் ஜெயலலிதாவின் பிரசாரப் பயணங்களைத் திட்டமிடும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்துவந்த செங்கோட்டையன், தவெகவில் இணைந்திருப்பது விஜய்க்கு தனி பலத்தைக் கொடுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

முன்னதாக, செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த அவர், திமுகவில் இணையக்கூடும் என்று கூறப்பட்டது. எனினும், தீவிர எம்ஜிஆர் விசுவாசியாகக் கருதப்படும் அவர், திமுகவுக்குப் பதிலாக தவெகவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு தவெக கடும் பின்னடைவைச் சந்தித்ததாக அரசியல் கள ஆய்வாளர்கள் கூறிவந்த நிலையில், அக்கட்சியில் செங்கோட்டையன் இணைந்திருப்பது அரசியல் களத்தில் திடீர் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தவெகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தவெகவில் தாம் இணைய தகுந்த காரணம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

“திமுக, அதிமுக என்பது வெவ்வேறு கட்சிகள் அல்ல. இவ்விரு கட்சியினரும் ஒன்றாக இணைந்துதான் பயணம் செய்கின்றனர்.

“அதிமுகவில் எம்ஜிஆரால் நான் அடையாளம் காட்டப்பட்டவன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக மூன்று கூறுகளாகப் பிரிந்தது. மீண்டும் அனைவரும் இணைய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டோம். ஆனால், அதைச் சாதிக்க முடியவில்லை,” என்றார் செங்கோட்டையன்.

குறிப்புச் சொற்கள்