சென்னை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சிப் பதவிகளில் இருந்து அதிமுக தலைமை அண்மையில் நீக்கியது. அதைத் தொடர்ந்து இப்போது செங்கோட்டையனின் ஆதரவாளர் என்று கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்திய பாமாவும் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்படுவதாகக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சத்தியபாமா, அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்,” என்று தெரிவித்துள்ளார்.
சத்தியபாமா திருப்பூர் மக்களவைத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி, செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாள்களுக்குள் அதிமுகவில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.
கட்சித் தலைமை அதற்கான முயற்சியில் இறங்கா விட்டால், பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அதற்கான பணிகளில் ஈடுபட வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார்.
அதையடுத்து அவரையும் அவருடைய ஆதரவாளர்களில் சிலரையும் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதாகக் கட்சித் தலைமை அறிவித்தது.
அதிமுகவில் மேலும் சிலரின் பதவிகள் பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
செங்கோட்டையன், சத்திய பாமா ஆகியோரின் பதவிப்பறிப்பைக் கண்டித்து ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
செங்கோட்டையனுக்கு ஆதரவாக சுமார் 2,000க்கும் மேற்பட்டோர், பதவி விலகல் கடிதங்களை தனித்தனியே எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.
இதில் ஒன்றிய, நகர, கிளை, கழக, பேரூர், வார்டு செயலாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். தாங்கள் அனுப்பி வைத்த கடிதத்தில் அதிமுக ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை சுட்டிக் காட்டியுள்ளனர்.
இந்நிலையில் வரும் 9ஆம் தேதி செங்கோட்டையன், மீண்டும் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களும் உடனிருப்பார்கள் என்று தெரிகிறது. அப்போது அவர் முக்கிய முடிவுகளை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.