கோபி (தமிழ்நாடு): முன்னாள் அமைச்சரும், கோபி சட்டமன்ற உறுப்பினருமான அதிமுகவின் செங்கோட்டையன் வீட்டுக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு நிதி ஒதுக்கிச் செயல்படுத்திய அதிமுக., பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அத்திக்கடவு - அவினாசி திட்டக் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டத்தின் அன்னுாருக்கு அருகே பாராட்டு விழா நடந்தது. அதில் திரு செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
“எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள், அவற்றின் தொடர்பிலான விழா அழைப்பிதழ், பதாகைகள், மின்னிலக்கப் பதாகைகள் காணப்படவில்லை. பாராட்டு விழாவுக்குப் போகவில்லையே தவிர, பழனிச்சாமியைப் புறக்கணிக்கவில்லை,” என திரு செங்கோட்டையன் விளக்கம் அளித்திருந்தார்.
அதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பதில் விளக்கம் அளித்திருந்தனர்.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள திரு செங்கோட்டையனின் பண்ணை வீட்டுக்கு மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரின் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவல்துறை அதிகாரிகள் இருவர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) இரவு முதல் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர் என்று தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.