மூத்த அரசியல் தலைவர் துரைமுருகன் தோல்வி

மூத்த அரசியல் தலைவர் துரைமுருகன் தோல்வி

கோப்புப் படம்: புதிய தலைமுறை

04 May 2026 - 10:30 pm

1 mins read

சென்னை: திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான துரைமுருகன், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் தோல்வி கண்டார்.

காலஞ்சென்ற தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு அரசியல் ஆலோசனைகளை வழங்கும் அளவுக்கு அவருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார் துரைமுருகன்.

இதுவரை காட்பாடி தொகுதியில் இருந்து எட்டு முறையும் ராணிப்பேட்டையில் இருந்து இரண்டு முறையும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன், சட்டமன்ற நடவடிக்கைகளின்போது நகைச்சுவையாகப் பேசி எதிர்க்கட்சியினரையும் கவரக்கூடிய ஆற்றல் கொண்டவர்.

கடந்த 1971ஆம் ஆண்டு முதல்முறையாகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் தமிழகத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து போட்டியிட்டுள்ளார். 1984, 1991 ஆகிய இரு தேர்தல்களில் மட்டுமே அவருக்குத் தோல்வி கிடைத்தது.

இம்முறை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள், முதுமை ஆகியவற்றை மீறி மீண்டும் காட்பாடி தொகுதியில் களமிறங்கினார் துரை முருகன். இதுவே தமது கடைசி தேர்தலாக இருக்கும் என்று கட்சிக் கூட்டங்களின்போது அவர் கூறி வந்ததாகச் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், அவர் தோல்வி கண்டுள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், பொதுப்பணித்துறை, சட்டத்துறை அமைச்சர், தமிழக நீர் வளத்துறை, கனிமங்கள், சுரங்கங்கள் ஆகிய துறைகளின் அமைச்சராகவும் செயலாற்றி உள்ளார் துரைமுருகன்.

குறிப்புச் சொற்கள்