புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகளின் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை அறிக்கை வழி மே 2ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்று பணமோசடியில் ஈடுபட்டார் என்பது செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டு.
இதுதொடர்பாக அவர் மீது மூன்று மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த வழக்குகளை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கிறது.
இந்நிலையில், வழக்கு விசாரணை முடிவடைய நீண்டகாலம் ஆகும் எனக் குறிப்பிட்டு, ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்குகளை விசாரிக்க ஏதுவாக சிறப்பு நீதிமன்றத்திற்கு காற்றோட்டமுள்ள விசாலமான பெரிய அறையை ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
“இந்த வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்கும் வகையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் விரைவாக அழைப்பாணை அனுப்பி விசாரணை தேதியை முடிவு செய்ய வேண்டும்.
“சிறப்பு நீதிபதி இதற்காக ஒரு வார காலத்திற்குள் வெவ்வேறு தேதிகளில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும்,” என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அவர்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து, வழக்கு விசாரணை மே 9ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

