தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி ஆணையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

1 mins read
ec677a15-4c6f-4827-9db3-a055705a99af
முதல்வர் ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கும் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான பரிந்துரையை வழங்க, ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

ஆணவப் படுகொலை தொடர்பாக பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, தமிழகத்தில் நடந்துள்ள சில சம்பவங்கள் சமுதாயத்தை தலைகுனியச் செய்கிறது என்றும் ஆணவப் படுகொலைக்கு சாதி மட்டும் காரணம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

கொலை எதற்காக நடந்தாலும் அது கொலைதான் என்று குறிப்பிட்ட திரு ஸ்டாலின், அனைத்து வகையான ஆதிக்க மனோபாவங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“சமூகங்களின் பெயர்களில் ‘ன்’ விகுதியை நீக்கி ‘ர்’ என மாற்ற சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமரைச் சந்தித்தபோது கோரிக்கையை முன்வைத்தேன். எதற்காகவும் ஒருவரை, மற்றொருவர் கொல்வதை நாகரிகச் சமூகத்தில் ஏற்க முடியாது. அனைத்து விதமான ஆதிக்கத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

“ஆதிக்க எதிர்ப்பும் சமத்துவச் சிந்தனையும் கொண்ட சுயமரியாதையும் அன்பும் சூழ்ந்த மானுடத்தை உருவாக்குவதற்கான பிரசாரத்தை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நம் அனைவரின் கடமை,” என்று முதல்வர் ஸ்டாலின் மேலும் கூறினார்.

தமிழக அரசின் ஆணையத்தில் சட்ட வல்லுநர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் இடம்பெறுவர் என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்