நான்கு எம்எல்ஏக்களில் ஒருவர் மீது தீவிர குற்றவியல் வழக்கு

நான்கு எம்எல்ஏக்களில் ஒருவர் மீது தீவிர குற்றவியல் வழக்கு

2 mins read
d2ec007c-6918-4d49-805e-ecc24a7bbd14
தவெகவைச் சேர்ந்த 107 பேரில் 41 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. - கோப்புப் படம்: தினமலர்

சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 233 சட்டமன்ற உறுப்பினர்களில் பலர் குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தப் பட்டியலில் ஆளும் தவெக முதலிடத்தில் உள்ளது. அக்கட்சியைச் சேர்ந்த 107 பேரில் 41 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன.

திமுக உறுப்பினர்களில் 37 பேர் வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதிமுகவில் 33 பேர், பாமக (4), காங்கிரஸ் (3), விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (தலா 2) எனப் பட்டியல் நீள்கிறது.

மேலும், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் என மொத்தம் 126 எம்எல்ஏக்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இவர்களில் தீவிர வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்களின் விவரங்களும் தெரியவந்துள்ளன. அதன்படி, தவெகவைச் சேர்ந்த 19 பேர், திமுக-அதிமுகவில் தலா 14 பேர், பாமக, காங்கிரசில் தலா 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், அமமுக, தேமுதிகவில் தலா ஒருவர் என வழக்குகள் உள்ளன.

குற்ற வழக்குகளில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றவர்களும் கொலை, கொலை முயற்சி, தாக்குதல், கடத்தல், பாலியல் வன்கொடுமை, ஊழல், சிறார்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவைத் தீவிர குற்ற வழக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதிதாகத் தேர்வான எம்எல்ஏக்களில் 56 பேர் தீவிர குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும், வெற்றி பெற்றபவர்களில் 193 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் வைத்துள்ளனர்.

தவெகவின் 107 எம்எல்ஏக்களில் 77 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்