தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருவண்ணாமலையில் எழுவரின் உடல்களும் மீட்பு

2 mins read
01164d6a-018a-4fc5-a66b-6401b7bc3f03
புயல் காரணமாக திருவண்ணாமலையில் இரண்டு நாள்களாக பெய்த கடும் மழையால், மலையிலிருந்து மண்ணும் பாறைகளும் உருண்டு விழுந்ததில், வீடுகள் இடிந்ததுடன் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த எழுவர் உயிரிழந்துள்ளனர். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த ஏழு பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. இருவரின் உடல்கள் நீண்ட போராட்டத்துக்குப் பின் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

புயாலால் ஏற்பட்ட கனமழையால் திருவண்ணாமலையின் தீபமலையில் ஞாயிற்றுக்கிழமை 4.40 மணியளவில் அபாயகரமான வகையில் திடீரென மண்சரிவு ஏற்பட ஆரம்பித்தது.

மலை அடிவாரப் பகுதியான வஉசி நகர் 9வது தெரு பகுதியில் உள்ள குடியிருப்புகள் இந்த மண் சரிவில் சிக்கிக்கொண்டன. இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகன் கவுதம், மகள் இனியா, உறவுக்கார சிறுமிகள் மகா, ரம்யா, வினோதினி ஆகியோர் சிக்கி உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் அனைத்தும் பாகம் பாகமாக மீட்கப்பட்டது அங்கிருந்தவர்களுக்கு கண்ணீரை வரவழைத்தது.

முன்னதாக ஐவரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மற்ற இருவரின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. பாறைக்கு அடியில் அவர்கள் இருக்கலாம் என யூகிக்கப்பட்டது. இயந்திரங்களைக் கொண்டு பாறைகள் அகற்றப்பட்ட நிலையில் இருவரின் உடல்கள் அங்கே தென்படவில்லை. இதனால், வேறு இடங்களில் உடல்களை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. இருவரின் உடல்களும் வீட்டின் வாசல் அருகே காணப்பட்டன.

மீட்பு முயற்சிகள் பலனளிக்காமல் எழுவரும் உயிரிழந்தது குறித்து அறிக்கை வெளியிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மண்ணில் புதையுண்டவர்களை உயிருடன் மீட்க போராடியதாகவும், ஆனால் முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்த சென்னை ஐஐடி.யை சேர்ந்த மண் பரிசோதனை நிபுணர்கள் அங்கு எதிர்காலத்திலும் நிலச்சரிவுகள் நேரிடும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, ஓய்வுபெற்ற ஐஐடி நிபுணர்கள் நரசிம்மராவ் மோகன், நாராயண ராவ், பூமிநாதன் ஆகியோர் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களிலும், வீடுகள் கட்டப்பட்டிருக்கும் இடங்களிலும் ஆய்வு செய்கிறார்கள்.

கனமழை தொடர்ந்து பெய்தால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகும் என அவர்கள் கூறியுள்ளனர்.

மலைக்கு அருகே வீடுகள் கட்டுவோர், உரிய பொறியாளர்களிடம் இருந்து பாதுகாப்பு அனுமதி பெற்றபிறகே வீடுகள் கட்ட வேண்டும் என்றும், மண் பரிசோதனை ஆய்வறிக்கை தமிழக அரசிடம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் மண் பரிசோதனைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு பின்புறம் மகா தீபம் ஏற்றும் 2,668 அடி உயர மலை உள்ளது. திருவண்ணாமலையில் கடந்த சில ஆண்டுகளாக இந்த மலையை ஆக்ரமித்து பலர் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்