சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு சில நாள்களாக அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.
இதனால், அப்பகுதிகளில் வெப்பநிலை குறைந்தும் பனிப்பொழிவு சூழ்ந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக சென்னை வட்டார மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) நிலவரப்படி, அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், கிழக்குக் கடற்கரைச் சாலை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகள் முழுவதும் பனி சூழ்ந்துள்ளதால் சாலைப்போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால், செங்கல்பட்டில் இருந்து கடற்கரை வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.
மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சென்னையில் தரையிறங்க வேண்டிய ஆறு விமானங்கள் பெங்களூர், திருவனந்தபுரம், ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டதாகவும் பதினைந்து விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.