சென்னை: சென்னையின் முக்கியமான குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியில், சட்டவிரோதமாகக் கழிவுநீர் கலப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அங்குள்ள சட்டவிரோத மழைநீர் வடிகால்கள், கழிவுநீர் கால்வாய்களை உடனடியாக அடைக்க வேண்டுமென சென்னை பெருநகர் நன்னீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியத்திற்கு தமிழ்நாடு மாசுபாடு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்மையில் செம்பரம்பாக்கம் ஏரியைச் சுற்றியுள்ள 16 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அப்பரிசோதனையின் முடிவில் ஏரிக்கு நீர் கொண்டு வரும் கால்வாய்களில் கரிம மாசுபாடு, மலக்கழிவு மாசுபாடு ஆகிய ஆபத்தான அளவில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.
நீரின் தரத்தை நிர்ணயிக்கும் பரிசோதனை மூலம் மாசுபாடு இருப்பது உறுதியானது.
‘டோட்டல் கோலிஃபார்ம்’ எனும் நுண்ணுயிரியின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்ட 5,000 அலகுகளைவிட மிக அதிகபட்சமாக 97,680 வரை பதிவாகியுள்ளது. மேலும், நீரில் கரையும் உயிர்வாயுவின் அளவும் மிகக்குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒரு வாரத்துக்குள் சட்டவிரோதக் கழிவுநீர் இணைப்புகளைத் துண்டித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தவறினால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஏரியிலிருந்து பெறப்படும் நீர் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட பிறகே பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாப்பான தரத்தில் உள்ளதாகவும் குடிநீர் வாரிய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் மாசுபாடு அதிகரித்திருப்பது தெரிய வந்ததையடுத்து, சென்னைவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உடனடியாக இவ்விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.
