தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமகம் குளத்தில் கழிவுநீர் கலப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசிடம் வலியுறுத்தினர்.
குளத்தில் கழிவுநீர் கலக்கும் காணொளியுடன் கூடிய சமூக ஊடகப் பதிவுகள் பலரால் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமகம் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமகப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இதில், பல்வேறு இந்திய மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏறக்குறைய ஒரு கோடி பக்தர்கள் கலந்துகொண்டு மகாமகக் குளத்தில் புனித நீராடுவர்.
குளத்தைச் சுற்றி 16 மண்டபங்களும் 21 தீர்த்தக் கிணறுகளும் உள்ளன. அதனால் இங்கு புனித நீராடுவோர்க்கு காசிக்குச் சென்று வந்ததற்கு நிகரான புண்ணியம் கிடைக்கும் என்பர்.
ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் மாசிமகம் திருவிழாவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு மாசி மாதத் திருவிழா கடந்த இரண்டாம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடினர்.
தமிழக அரசின் அறநிலையத்துறை, நீர்வளத்துறை, தஞ்சாவூர் மாநகராட்சி கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வரும் மகாமகக் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) திடீரென துர்நாற்றம் வீசியது.
குளத்துக்குத் தண்ணீர் வரும் பாதையில் இருந்து கறுப்பு நிறத்தில் கழிவுநீர் வந்ததைக் கண்டு பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
குளத்தில் கழிவுநீர் கலப்பதை அந்த வழியாகச் சென்ற சிலர் பார்த்து காணொளியாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
இதையடுத்து, தேங்கியிருந்த கழிவுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மகாமகக் குளத்தில் உள்ள நீரை முழுவதுமாக அப்புறப்படுத்தி மீண்டும் அதை நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

