ஆராய்ச்சி மாணவிக்குப் பாலியல் தொல்லை: சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கம்

ஆராய்ச்சி மாணவிக்குப் பாலியல் தொல்லை: சென்னை ஐஐடி நிர்வாகம் விளக்கம்

படம்: ஊடகம்

15 Jan 2025 - 9:55 pm

1 mins read

சென்னை: முன்னணி இந்தியக் கல்வி நிலையங்களில் ஒன்றான சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளியான தகவல் குறித்து அதன் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் அண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இது தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சென்னை ஐஐடியிலும் அதேபோன்ற சம்பவம் நிகழ்ந்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஐஐடி வளாகம் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

“ஜனவரி 14ஆம் தேதியன்று மாலை 5.30 மணியளவில் சென்னை தரமணி பகுதியில் உள்ள ஒரு தேநீர் கடையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவி ஒருவர் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த மாணவியுடன் சென்ற மாணவர்களும் சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்களும் குற்றவாளியைப் பிடித்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

“குற்றம் சாட்டப்பட்டவர் சென்னை ஐஐடி வளாகத்துக்கு வெளியே ஒரு கடையில் பணிபுரிகிறார். அவருக்கு சென்னை ஐஐடி உடன் எந்தத் தொடர்பும் இல்லை,” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஐடி வளாகத்துக்குள் குடியிருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் வெளியே செல்லும்போது முன்னெச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதன் நிர்வாகம் கூறியது.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தேவையான அனைத்து ஆதரவையும் சென்னை ஐஐடி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்