பாலியல் வழக்கு: முன்னாள் காவல்துறை ஆணையர் அருண் உட்பட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை

பாலியல் வழக்கு: முன்னாள் காவல்துறை ஆணையர் அருண் உட்பட 7 அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை

கோப்புப் படங்கள்: ஏபிபி

13 Nov 2026 - 5:26 pm

1 mins read

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கிரானைட் அதிபர் வீரமணி மீதான சிறார் பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் அருண் உட்பட ஏழு காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

சிறுமியரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கிரானைட் வீரமணி (85), அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி (61), அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் (63) உள்ளிட்ட எட்டுப் பேரைக் காவல்துறையினர் ஏற்கெனவே கைது செய்தனர். இந்த விவகாரத்தில் எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிர விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், வீரமணிக்கு எதிரான முதல் ‘போக்சோ’ வழக்கில், 40 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு, வழக்குப் பதிவான 46 நாள்களில் சிறப்பு நீதிமன்றத்தில் 720 பக்கங்கள் கொண்ட இறுதிக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் குற்றவாளியாக வீரமணியும் அவருக்கு உடந்தையாக இருந்ததாகப் பார்த்திபன், பாபு ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கின் முக்கியத் திருப்பமாக, பாதிக்கப்பட்டோர் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் முறையான சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டியதாகவும் சென்னை முன்னாள் காவல்துறை ஆணையர் அருண் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள், ஓர் உதவி ஆணையர், இரண்டு ஆய்வாளர்கள் என மொத்தம் ஏழு காவல்துறை அதிகாரிகளின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்