மாணவிக்குப் பாலியல் தொல்லை: அண்ணா பல்கலை பேராசிரியர் கைது

மாணவிக்குப் பாலியல் தொல்லை: அண்ணா பல்கலை பேராசிரியர் கைது

2 mins read
1a1f8d2a-7268-428f-88c6-c256e7c02dd6
பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை கைது செய்யக் கோரி அண்ணா பல்கலைக்கழகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர். (உள்படம்) ஞானவேல் பாபு. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பேராசிரியர் ஞானவேல் பாபு என்பவர் நெல்லை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படித்து வரும் அந்த மாணவி காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று பேராசிரியர் மீது புகார் அளித்துள்ளார். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக பேராசிரியர் ஞானவேல் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும் மாணவி தெரிவித்திருப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தமக்கு நன்கு படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற விருப்பம் இருந்ததாகவும் ஆனால் போதிய வழிகாட்டல் இல்லாமல் தவித்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவி கூறியுள்ளார்.

அவரது நிலைமையை அறிந்த பேராசிரியர் ஞானவேல் பாபு, தாம் உதவுவதாக நம்பிக்கையூட்டியதுடன், அண்ணா பல்கலையில் சேர்ந்து படிக்க மாணவிக்கு உதவியதாகக் கூறப்படுகிறது.

மேலும், கல்வி உதவித்தொகை பெறவும் ஞானவேல் பாபு உதவியதால் தமக்கு அவர் மீது நன்மதிப்பு ஏற்பட்டதாகவும் எனினும், நாளடைவில் அவரது போக்கிலும் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டதாகவும் புகார் மனுவில் அம்மாணவி குறிப்பிட்டுள்ளார்.

கைப்பேசியில் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசுவது, ஆபாசக் காணொளிகள், குறுந்தகவல்கள் அனுப்புவது என பேராசிரியர் தொல்லை கொடுக்கவே, அவரை விட்டுப் படிப்படியாக தாம் விலக நேரிட்டது என்றும் கடந்த மூன்று ஆண்டுகளாக அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்ட வந்த அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவி வலியுறுத்தி உள்ளார்.

இதையடுத்து சென்னை, கோட்டூர்புரம் பகுதியில் வசித்து வந்த பேராசிரியர் ஞானவேல் பாபுவை கைது செய்ய சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார். விசாரணையில் அவர், திருநெல்​வேலி மாவட்​டம் வள்​ளியூரில் உள்ள உறவினர் வீட்​டில் பதுங்கி இருந்​தது தெரிந்​தது.

நெல்லை காவல்துறை அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

பேராசிரியர் ஞானவேல்​பாபுவை பணி​யிடை நீக்​கம் செய்து பல்​கலைக்​கழகம் நடவடிக்கை எடுத்​துள்​ளது. இதற்​கிடையே, அவர் மீது மேலும் சில மாணவி​கள் புகார் தெரி​வித்​துள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி உள்​ளது.

குறிப்புச் சொற்கள்