பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

2 mins read
fc29a3c4-1b1b-402a-8d5c-ffb5dc87ec7e
உயர் நீதிமன்றம். - கோப்புப் படம்: தினமணி
Google News Preferred Icon

சென்னை: பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க முயற்சி செய்ய வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல பாலியல் குற்ற வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள உயர் நீதிமன்றம், ‘போக்சோ’ வழக்குகளில் தேவையற்ற கால தாமதத்தைத் தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. காவல்துறையினரின் அதிகார வரம்புமீறலைக் கட்டுப்படுத்த இரவு சுற்றுகாவல் நடைமுறையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் காலியாக உள்ள ‘போக்சோ’ நீதிபதி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர், அண்மையில் திருவண்ணாமலையில் உள்ள கோவிலில் வழிபாடு செய்ய சென்றிருந்தார். அப்போது கிழக்கு காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர், அவரைப் பாலியல் வன்கொடுமைச் செய்ததாகப் புகார் எழுந்தது.

பாதிக்கப்பட்ட பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். மேலும், மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள், ‘போக்சோ’ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களையும் அவர் கோரினார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுஷ்ருத் அரவிந்த், அருள் முருகன் இருவர் கொண்ட அமர்வு, பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியது.

பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனத் தமிழகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றங்களுக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களுக்கும் அவர்கள் உத்தரவிட்டனர். ‘போக்சோ’ வழக்குகளில் விசாரணை தொடங்கிய 30 நாள்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறாரின் வாக்குமூலத்தைப் பதிவுசெய்து, ஓராண்டுக்குள் முழு விசாரணையையும் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

போக்சோ வழக்குகளை விரைந்து விசாரிக்க அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு அதிரடிப்படையை அமைக்கவும் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்