ஆட்சியில் பங்கு: காங்கிரஸ் பிடிவாதம்; கூட்டணியில் மீண்டும் சலசலப்பு

2 mins read
27728e1b-1816-4ca9-8e60-9146caa07a46
தமிழகத்தில் கூட்டணி அரசு அமைய வாய்ப்பே இல்லை என திமுக தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: டெக்கான் ஹெரால்டு
multi-img1 of 2

சென்னை: தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டுமென காங்கிரஸ் கட்சி மீண்டும் வலியுறுத்தி உள்ளது.

கேரளாவில் கூட்டணி அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பில் நம்பிக்கையான பாதை வகுக்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் தினத்தன்று வெளியான அவரது இந்தப் பதிவு திமுக தரப்பில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

“தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர். ஆட்சியில் பங்கு என்றால் என்ன என்பதை அறிய ஒரு ‘முன்மாதிரி’ உண்டு.

“கேரளாவின் ஒன்றுபட்ட ஜனநாயக முன்னணி மாதிரிதான் அது. அங்கு காங்கிரஸ்தான் கூட்டணிக்குத் தலைமை வகிக்கிறது. ஆனால் அதிகாரம் ஓர் இடத்தில் மட்டும் குவிக்கப்படவில்லை. எல்லாருக்குமாகப் பகிரப்படுகிறது.

“நட்பும் பங்கும் என்பதே ஒன்றுபட்ட ஜனநாயக முன்னணி அரசியலின் அடித்தளம்,” என்று மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கூட்டாளிகள், ஆட்சியில் பங்குபெறும் கூட்டாளிகளே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் பதவிகளும் முக்கிய துறைகளும் பலத்தையும் உடன்பாட்டையும் பொறுப்பையும் அடிப்படையாகக் கொண்டு பகிரப்படுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அது ஆட்சி அதிகாரத்துக்காக அல்ல என்று கூறியுள்ளார்.

கேரளாவில் தேர்தலுக்குப் பின் துரோகங்கள் இல்லை என்றும் வாக்குகள் எண்ணப்பட்டதும் கூட்டணியை ஒதுக்கும் அரசியல் இல்லை என்றும் திரு மாணிக்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இதுதான் ஒன்றுபட்ட ஜனநாயக மாடல். கூட்டணி தர்மத்தின் அடிப்படையிலான செயல்பாட்டில் ஒன்றாகப் போராட வேண்டும். ஒன்றாக ஆட்சி செய்ய வேண்டும். இந்த ஒன்றுபட்ட ஜனநாயக முன்னணி வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் வெற்றி பெற்று நல்ல ஆட்சியாக மாறட்டும், ஆட்சியில் பங்கு வேண்டும். தை பிறந்தால் வழிபிறக்கும்,” என்று மாணிக்கம் தாகூர் தமது எக்ஸ் பதிவில் மேலும் விரிவாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் கூட்டணி அரசு அமைய வாய்ப்பே இல்லை என திமுக தரப்பில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக எப்போதும் தனித்துதான் ஆட்சி அமைக்கும் என்றும், ஆட்சியில் பங்கு தர வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் பொங்கல் நாளன்று கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியின் நடைமுறை குறித்து விரிவாக எடுத்துக்கூறி தமிழகத்திலும் காங்கிரஸ் கூட்டணி அவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு திமுக தரப்பில் இருந்து விரைவில் பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்